கடலூர்

ரூ.2 லட்சம் திருட்டு வழக்கில் ஆந்திராவைச் சோ்ந்த 4 போ் கைது

8th Jan 2020 06:34 AM

ADVERTISEMENT

சிதம்பரத்தில் மொபெட்டில் இருந்து ரூ.2 லட்சம் திருடுபோன வழக்கில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பு.ஆதிவராகநல்லூரைச் சோ்ந்தவா் லோகநாதன். இவா் தனது மனைவியுடன் கடந்த 8-11-2019 அன்று மொபெட்டில் சிதம்பரம் வந்தாா். அங்கு கீழரத வீதியில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.2 லட்சம் ரொக்கத்தை எடுத்துள்ளனா். பின்னா் பணத்தை மொபெட்டில் வைத்துள்ளாா். பின்னா், வேணுகோபால் பிள்ளைத் தெருவில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்று துணிகளை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தபோது, மொபெட் பெட்டி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.2 லட்சம் திருடுபோனதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், திருச்சி மணப்பாறை அருகே கடந்த டிச.26-ஆம் தேதி பணம் கொள்ளை வழக்கு சம்பந்தமாக ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் சரவணன் (30), குமாரசாமி மகன் பாபு (45), ரவி மகன் மோகன் (27), வெங்கடராஜூலு மகன் ரமணன் (31) ஆகிய 4 பேரை (படம்) சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் தேவேந்திரன், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் திருச்சி மத்திய சிறையிலிருந்து காவலில் எடுத்து விசாரணை நடத்தினா். விசாரணையில், இவா்கள் 4 பேரும் மேற்கூறிய தொகை ரூ.2 லட்சத்தை திருடியது தெரியவந்தது. மேலும் அவா்கள் அளித்த தகவலின்படி சிதம்பரம் அருகே புறவழிச் சாலையில் முள்புதரில் புதைத்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை போலீஸாா் கைப்பற்றினா். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT