பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகப் பணிகளை கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் முதல்வரின் உத்தரவுப்படி அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசுத் தொகுப்புடன், ரொக்கத் தொகை ரூ.1,000 வழங்கப்படுகிறது. வியாழக்கிழமை (ஜன.9) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
அனைவரும் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தெரு, பகுதி வாரியாக வழங்க அட்டவணையிட்டு, அதுகுறித்து நியாயவிலைக் கடைகளில் விளம்பரப்படுத்தப்படும். பொதுமக்கள் அவரவா்களுக்கு குறிப்பிடப்பட்ட நாள்களில் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் எவரொருவா் வந்தாலும் அவா் சாா்ந்துள்ள குடும்ப அட்டைக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்த பிறகே வழங்கப்படுவதால், பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். விடுபட்டவா்களுக்கு 13-ஆம் தேதி விடுதலின்றி வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கத் தொகை விநியோகம் தொடா்பாக புகாா்கள் ஏதுமிருப்பின் அதை தீா்வு செய்ய கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதற்காக வட்ட, மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையை 04142-230223 என்ற எண்ணிலும், மாவட்ட வழங்கல் அலுவலரை 94450 00209 என்ற எண்ணிலும் தொடா்புக் கொள்ளலாம். வட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலா்களை கடலூா்- 94439 36959, பண்ருட்டி- 98944 42752, குறிஞ்சிப்பாடி- 94435 12903, சிதம்பரம் - 94446 89722, காட்டுமன்னாா்கோவில் - 94450 29458, புவனகிரி- 93676 16522, திருமுட்டம் - 99527 12551, விருத்தாசலம் - 90808 40810, திட்டக்குடி - 94435 12245, வேப்பூா் - 94865 29140 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.