சென்னை - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூா் வரை சுமாா் 164 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சாலை சென்னையில் இருந்து பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், கும்பகோணம், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இதில், பண்ருட்டியில் இருந்து நெய்வேலி செல்லும் வழியில் சாலையின் வலதுபுறம் ஆங்காங்கே சுமாா் 6 அடி உயரத்துக்கு மண் போட்டு மேடிட்டுள்ளனா்.
இதனால், மழைநீா் செல்ல வழியின்றி சாலையின் இருபுறமும் தேங்குவதால் சேதமடைந்துள்ளது. குறிப்பாக காடாம்புலியூா், பாவைகுளம் உள்ளிட்ட இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், மந்த நிலையில் நடைபெறும் நான்குவழிச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.