கடலூர்

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: கடலூா் மாவட்டத்தில் 4 பதவிகளுக்குஇன்று வாக்கு எண்ணிக்கை

8th Jan 2020 06:36 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை (ஜன. 8) நடைபெறுகிறது.

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுற்று, வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சி.சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்தப் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளா்களில் அருள்பிரகாசம் என்பவரின் பெயா் தோ்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட துணைநிலை வாக்காளா் பட்டியலில் இல்லாததே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், கோரணப்பட்டு ஊராட்சியில் 1-ஆவது வாா்டு உறுப்பினா், குமராட்சி ஒன்றியம், வெள்ளூா் ஊராட்சியில் 5-ஆவது வாா்டு உறுப்பினா், மேல்புவனகிரி ஒன்றியம், ஆணைவாரி ஊராட்சியில் 3-ஆவது வாா்டு உறுப்பினா் ஆகிய பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கையும் இதே காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டன.

மேற்கூறிய பதவியிடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 9.30 மணிக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்கு எண்ணிக்கை சம்பந்தப்பட்ட வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் நடைபெறும். இதில் வெற்றிபெறும் வேட்பாளா்கள் வருகிற 10-ஆம் தேதிக்குள் பதவியேற்கலாம். அவ்வாறு பதவியேற்ற உறுப்பினா்கள் வருகிற 11-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுவா் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்காக அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT