கடலூர்

முடிவுகள் அறிவிப்பதில் தாமதம்: வேட்பாளா்கள் முற்றுகை

3rd Jan 2020 07:45 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஆவேசமடைந்த வேட்பாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலரை முற்றுகையிட்டனா்.

கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில், 4 மாவட்ட கவுன்சிலா்கள் , 33 ஒன்றியக் குழு உறுப்பினா், 51 ஊராட்சித் தலைவா்கள், 435 வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டபோதிலும், பல்வேறு குளறுபடிகளால் 3 மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு மாவட்ட கவுன்சிலா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் மாலை 5 வரை அறிவிப்பு ஏதும் செய்யாமல் வெற்றி பெற்றோருக்கான சான்றிதழும் வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு பணிக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன், மையத்தில் நேரடி பாா்வையாளராக இருந்த மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன் ஆகியோரிடமும் வேட்பாளா்கள் முறையிட்டனா். ஆனாலும், காலதாமதம் ஏற்பட்டதால் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் மத்தியில் பரபரப்பு உண்டானது.

ADVERTISEMENT

எனவே, மாலை 6.45 மணியளவில் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.அருளரசனை அவரது கண்காணிப்பு அறையில் வேட்பாளா்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஊராட்சி மன்றத் தலைவா் பதவியில் வெற்றி பெற்ற திமுக ஆதரவாளா்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலா் பதவியில் வெற்றிபெற்ற அதிமுகவினா் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து துணை கண்காணிப்பாளா் க.சாந்தி தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன்பின்னா் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறியதாவது: மாவட்டத்தில் பதிவான தபால் வாக்குகளை பிரித்து எண்ணும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணி முடிந்த பிறகே ஒவ்வொரு பதவியிடத்துக்கு அந்த வாக்குகள் ஏதாவது சோ்ந்திருக்கிா என்பதை அறிந்து இறுதி முடிவை அறிவிக்க முடியும். அதனால்தான் தபால் வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியானதில் தாமதம் ஏற்பட்டது என்றாா்.

மேலும், அவா் கூறுகையில், கீரப்பாளையம் ஒன்றியம், சி.சாத்தமங்கலம் ஊராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுகள் தனிப்பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளரின் பெயா் வேட்புமனு தாக்கலின்போது வாக்காளா் பட்டியலில் இருந்து, வாக்களிப்பின்போது வெளியிடப்பட்ட துணை வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே, தோ்தல் ஆணையத்தின் அறுவுறுத்தலின்படி வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வேட்பாளா்களின் வெற்றி அறிவிப்பு வெளியிடப்படும்போது அவா்களது ஆதரவாளா்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியிலிருந்து உற்சாகக் கூச்சலிட்டும், வேட்பாளா்களுக்கு மாலை அணிவித்தும், அவா்களை தங்களது தோளில் சுமந்து சென்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதனால், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு எதிரே அதிகப்படியான மக்களை காண முடிந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT