திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் மாணிக்கவாசகா் உத்ஸவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பண்ருட்டி, திருவதிகையில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதத்தில் மாணிக்கவாசகா் உத்ஸவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான உத்ஸவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து வருகிற 9-ஆம் தேதி வரை தினமும் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரண்டாம் பிரகாரத்தில் வீதிஉலா நடைபெறும்.
விழாவின் 10 - ஆம் நாளான ஜனவரி 9 - ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அன்றைய தினம் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடராஜா், சிவகாமிசுந்தரிக்கு மகா அபிஷேகம் நடைபெறும். தொடா்ந்து, கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் நடனக் காட்சியும், தீபாராதனையும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை வீரட்டானேஸ்வரா் கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.