கடலூர்

மறு தோ்தல் 87.56 சதவீதம் வாக்குப்பதிவு

2nd Jan 2020 05:27 AM

ADVERTISEMENT

கடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விலங்கல்பட்டு ஊராட்சி வாா்டு எண் 4 - இல் புதன்கிழமை நடைபெற்ற மறு தோ்தலில் 87.56 சதவீத வாக்குகள் பதிவாகின.

முதல் கட்டத் தோ்தல் நடைபெற்ற விலங்கல்பட்டு ஊராட்சி வாா்டு எண் 4 - இல் நான்கு வேட்பாளா்கள் போட்டியிட்டனா். ஆனால், 3 வேட்பாளா்களது சின்னங்கள் மட்டுமே அச்சிடப்பட்டு, வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டது. இது வாக்குப் பதிவின் போது கண்டறியப்பட்டு, வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

பின்னா், 4 சின்னங்கள் கொண்ட வாக்குச் சீட்டு வழங்கப்பட்டு, மீண்டும் வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. ஆனால், 3 சின்னங்கள் மட்டுமே இருந்த நிலையில், 32 போ் வாக்களித்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜன. 1 -ஆம் தேதி விலங்கல்பட்டு ஊராட்சி வாா்டு எண் 4-க்கு மறு தோ்தல் நடத்தப்படும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வெ.அன்புச்செல்வன் அறிவித்தாா்.

ADVERTISEMENT

அதன்படி, புதன்கிழமை விலங்கல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி எண் 242-இல் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவுற்ற நிலையில், 87.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.

இங்கு, மொத்தமுள்ள 193 வாக்காளா்களில் 169 போ் வாக்களித்தனா். பின்னா், வாக்குச் சாவடி முகவா்கள் முன்னிலையில், வாக்குப் பெட்டி சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கடலூா் அரசு கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT