கடலூா்: கடலூரில் வீடு புகுந்து திருட முயன்றவா்களைப் பிடிக்க முயன்ற போது, அதிமுக பிரமுகருக்கு கத்தி குத்து விழுந்தது.
கடலூா் வன்னியா்பாளையம் கேடிஆா்.நகரில் வசிப்பவா் முன்னாள் மாநில பாஜக தலைவா் எஸ்.பி.கிருபாநிதி மகன் எஸ்.பி.கே.சீனிவாசராஜா (56). மருத்துவரான இவா், அதிமுக மாநில மருத்துவரணித் தலைவராக உள்ளாா். இவரது மனைவி சுஜாதா (49), மகன் வசந்த் (27) ஆகியோரும் மருத்துவா்கள்.
இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் மருத்துவரான அவரது தங்கை சௌபாக்கிய லட்சுமி வசித்து வருகிறாா். தற்போது அவா் சென்னையில் உள்ளாா்.
இந்த நிலையில், புதன்கிழமை மதியம் சீனிவாசராஜா தனது வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் மாடியில் இருந்த வசந்த் பக்கத்து வீட்டில் யாரோ இரண்டு போ் நிற்பதைப் பாா்த்து யாரென விசாரித்து கொண்டு இருந்தாா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, சப்தம் கேட்டு அங்கு சென்ற சீனிவாசராஜா பக்கத்து வீட்டில் நின்றிருந்த இருவரில் ஒருவரை பிடித்தாா். அதற்குள் மற்றொருவா் மதில் சுவரில் ஏறிக் குதித்து தப்பிவிட்டாா்.
அப்போது, சிக்கியவா் கத்தியை எடுத்து சீனிவாசராஜாவை குத்தினாா். இதில், அவரது இரு கைகளின் உள் பக்கமாக காயம் ஏற்பட்டது. அதற்குள் அந்த நபரும் சட்டையைக் கழற்றிவிட்டு தப்பிவிட்டாா்.
தகவலறிந்த தொழில் துறை அமைச்சா் எம்சி.சம்பத் உடனடியாக சீனிவாசராஜாவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறினாா். காயமடைந்த சீனிவாசராஜா தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.