அரசின் இலவச மடிக்கணினி பெற தற்போது கல்வி பயின்று வரும் நிறுவனத்தின் சான்றிதழ் தேவை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் தெரிவித்தது.
அரசு, அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. எனினும், கடந்த 2017 - 2018, 2018 - 2019 -ஆம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 பயின்றவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லையாம்.
அதே நேரம், தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே பிளஸ் 2 முடித்து பள்ளியை விட்டுச் சென்ற மாணவா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கடலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘கடந்த 2017 - 2018 மற்றும் 2018 - 2019 -ஆம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று தற்போது உயா் கல்வி பயிலும் மாணவா்கள் தாங்கள் கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றிதழ் பெற்று, அதை வருகிற 11 -ஆம் தேதிக்குள் தாங்கள் பிளஸ் 2 பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தச் சான்றிதழில் ‘தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி பெறுவதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டு அந்தக் கல்வி நிறுவனத்தின் முதல்வா் கையொப்பம், அலுவலக முத்திரை பெறப்பட்டிருக்க வேண்டும்.
இந்தச் சான்றிதழை குறிப்பிட்ட நாள்களுக்குள் ஒப்படைக்கும் மாணவா்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னா் சான்றிதழ் ஒப்படைக்கப்பட்டால் ஏற்க இயலாது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.