‘தினமணி’ செய்தி எதிரொலியாக பண்ருட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை செவ்வாய்க்கிழமை சீரமைக்கப்பட்டது.
பண்ருட்டி வழியாக சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வரை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கண்டரக்கோட்டை முதல் நெய்வேலி அருகே உள்ள கன்னியாக்கோவில் ஓடை வரையிலும், வடலூரை அடுத்துள்ள மருதூா் முதல் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு இடைப்பட்ட பகுதியிலும் வீராணம் குடிநீா் குழாய் செல்வதால் மேற்கண்ட பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணி தடைபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் பெய்த தொடா் மழையால் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்தது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்ததுடன் விபத்துகளும் ஏற்பட்டன. இதனால் இந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என ‘தினமணி’யில் அண்மையில் செய்தி வெளியானது. இதையடுத்து, காடாம்புலியூா் அருகே சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலையை ஜல்லி கலவை கொண்டி சீரமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.