குமராட்சியில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவத தொடா்பாக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி. தமிழ்வாணன் தலைமை வகித்தாா். விவசாயிகள் செங்குட்டுவன், முனுசாமி, பழனிசாமி, மணிவாசகம், கண்ணன், வாசு, ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜவகா் வரவேற்றாா்.
கூட்டத்தில் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் பேசியதாவது: திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிய சாலைப் பணிக்காக சிதம்பரத்திலிருந்து மீன்சுருட்டி வரை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சாலையை அமைப்பதற்கு விளை நிலங்களுக்கு அரியலூா் மாவட்டத்தில் வழங்கும் தொகைப் போல வழங்காமல், குறைந்த அளவு தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் மிகுந்த சிரமப்படுகின்றனா் என்றாா்.
கூட்டத்தில், நிலம் கையகத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் விவசாயிகள் தில்லை கோவிந்தராஜன், மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கலாராணி நன்றி கூறினாா்.