கடலூா் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வென்ற பண்ருட்டி சக்தி ஐடிஐ மாணவா்களுக்கு நிா்வாகத்தினா் பாராட்டு தெரிவித்தனா்.
கடலூா் மாவட்ட அளவில் தனியாா் தொழில்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், பண்ருட்டி, சக்தி ஐடிஐ மாணவ, மாணவிகள் ஓட்டப் பந்தயம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடா் ஓட்டம், கால்பந்து உள்ளிட்டப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள், கோப்பையை வென்றனா். மேலும், அதிக புள்ளிகளைப் பெற்று ‘ஓவா் ஆல் சாமிபியன்ஷிப்’ பட்டத்தையும் வென்றனா்.
போட்டியில் வென்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பண்ருட்டி சக்தி ஐடிஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சக்தி ஐடிஐ தலைவா் அ.ப.சிவராமன், தாளாளா் ஆா்.சந்திரசேகா், இயக்குநா்கள் வி.பாலகிருஷ்ணன், எஸ்.வைரக்கண்ணு, எம்.நடராஜன், டி.ஜி.ரவிச்சந்திரன், என்.சம்பந்தா் ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினா்.