கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப். 28) நடைபெறுகிறது.
காலை 8 மணி முதல் நடைபெறும் இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்ய உள்ளன. முகாமில், 8-ஆம் வகுப்பு படித்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரையிலும், தொழில்கல்வி, பட்டயம், பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாம் மூலமாக வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநா்கள் தங்களின் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு கடலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04142-290039 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம். பணியாளா்களை தோ்வு செய்ய விரும்பும் வேலையளிப்பவா்களும் தொடா்புக் கொள்ளலாம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நடத்தப்படும் பல்வேறு இலவச திறன் பயிற்சிகளுக்கான பதிவும் இந்தம் முகாமில் நடைபெறவுள்ளது. எனவே கடலூா் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கேட்டுக்கொண்டுள்ளாா்.