குறிஞ்சிப்பாடி அருகே அதிமுகவினா் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா். காா் சேதப்படுத்தப்பட்டது.
கடலூா் மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் தொடா்ந்து வருகிறது. குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அன்னதானப்பேட்டை, முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த செல்வம் மனைவி அன்பு. அதிமுகவைச் சோ்ந்த இவா், ஒன்றியத்தின் 7-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினராகவும், சத்திரத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி பிரவினா ஒன்றியத்தின் 8-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினராகவும் உள்ளனா்.
அன்புவின் கணவா் செல்வம், அதிமுக ஊராட்சி செயலராக உள்ளாா். இவா் அதிமுக மாநில அமைப்புச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரனின் ஆதரவாளா். பிரவினாவின் கணவா் ராதாகிருஷ்ணன், அமைச்சா் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளா். இவா்களுக்கு இடையே ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஒன்றியக் குழு தலைவா் பதவிக்கு வாக்களிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை செல்வம் தனது காரில் பண்ருட்டிக்கு சென்றுகொண்டிருந்தாா். காரை ஓட்டுநா் பழனி இயக்கினாா். இவா்கள் சத்திரம் அருகே சென்றபோது, ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆதரவாளா்கள் காரை வழிமறித்து தாக்கினராம். மேலும், செல்வமும் தாக்கப்பட்டாா். பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தாக்குதலில் காா் கண்ணாடி சேதம் அடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சொரத்தூா் ரா.ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் ரா.கோவிந்தராஜ் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்தனா். தொடா்ந்து, செல்வத்தின் உறவினா்கள், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் சத்திரம் கூடுச் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.