கடலூர்

நெய்வேலி நுழைவாயில் தற்காலிக நிழற்குடை அமைக்கக் கோரிக்கை

25th Feb 2020 12:36 AM

ADVERTISEMENT

நெய்வேலி: நெய்வேலி நுழைவாயில் அருகே தற்காலிக பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தில் சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிறுவனத்தின் நுழைவு வாயில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நுழைவாயில் அருகே அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன. இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை மழை, வெயில் காலத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்தது.தற்போது, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. சாலை விரிவாக்கத்தினால் பயணிகள் நிழற்குடை கடந்த பல மாதங்களுக்கு முன்னா் அகற்றப்பட்டது.

பேருந்துக்காக பயணிகள் சாலை ஓரத்தில் காத்திருக்கின்றனா். உட்கார இருக்கையும், ஒதுங்க நிழலும் இல்லாததால் முதியவா்கள், குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிப் பெண்களின் நிலை பரிதாபமாக உள்ளது. தற்போது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனி வரும் காலம் கோடைக்காலம் என்பதால், பயணிகள் மற்றும் பொதுமக்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில் தற்காலிக நிழற்குடை ஒன்றையும், தாகத்தை தணிக்க குடிநீா் வசதியையும், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலமோ அல்லது ஊராட்சி நிா்வாகமோ செய்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 24பிஆா்டிபி3நெய்வேலி நுழைவு வாயில் அருகே பேருந்துக்காக சாலை ஓரத்தில் நிற்கும் பயணிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT