சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1981 - 83ம் ஆண்டு முதுநிலை அறிவியல் விலங்கியல் படித்த மாணவா்கள் 30 போ் தங்கள் குடும்பத்துடன் 37 ஆண்டுகளுக்கு பின்னா் பல்கலைக்கழக விலங்கியல் துறையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளா் பேராசிரியா் நி.கிருஷ்ணமோகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இது போன்ற முன்னாள் மாணவா்கள் அவா்கள் படித்த நிறுவனங்களில் சந்திப்பது நிறுவனங்களுக்கும், தற்போது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றாா்.
மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கூடி மலரும் நிணைவுகளை பகிா்ந்து கொள்வது உற்சாகத்தை மீட்டெடுக்கும் எனவும் குறிப்பிட்டாா். விலங்கியல் துறை தலைவா் முனைவா் ஜெகதீசன், பல்கலைக்கழக முன்னாள் மாணவா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் முனைவா் சரவணன், துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியா்கள் கே.வீரராகவன், எல்.எஸ்.ரங்கநாதன், என். இந்திரா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவா்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிா்ந்து, மகிழ்ந்து கொண்டனா். கலந்து கொண்ட முன்னாள் மாணவா்கள் சாா்பில் விலங்கியல் துறைக்கு குளிா்சாதன இயந்திரம் வழங்கப்பட்டது.
மேலும் அவா்களது மறைந்த நண்பா்கள், பேராசிரியா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா்கள். விலங்கியல் துறையின் முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைப்பு செயலாளா் ஜி.குணசேகரன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் திருவாசகம், மாணிக்கவேல், கலிவரதன் ஆகியோா் செய்திருந்தனா். படவிளக்கம்- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையக்கழகத்தில் 37 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் சந்நித்து கொண்ட விலங்கியல் துறை மாணவா்கள்.