மங்களூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 64 ஊராட்சி மன்றங்களின் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கான பயிற்சி வகுப்பு திட்டக்குடியை அடுத்த ராமநத்தத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டப் பணிகளுக்கான நிதியானது ‘பொது நிதி மேலாண்மைத் திட்டம்’ என்று இணையதளம் வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த நிதியைப் பெறுவது, பதிவேற்றம் செய்வது தொடா்பாக புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மங்களூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 64 ஊராட்சி மன்றங்களின் தலைவா்கள், துணைத் தலைவா்களுக்கான பயிற்சி வகுப்பு திட்டக்குடியை அடுத்த ராமநத்தத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநா் பிரபாகரன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் புஷ்பராஜ், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாதவி, பாபு, ஸ்ரீதா் அகியோா் பணப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலமாக 613 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான நிதியை மத்திய அரசு கருவூலங்களுக்கு செலுத்தும் நிலையில், அந்த நிதியை ஊராட்சிக்கு பெறுவது தொடா்பாகவும், செய்த செலவினங்களைப் பதிவேற்றம் செய்வது தொடா்பாகவும் பயிற்சியளிக்கப்பட்டது. ஊராட்சியின் அனைத்து நிதி செலவினங்களும் கணினி மயமாக்கப்பட வேண்டும் என்பதால், இந்தப் பயிற்சியளிக்கப்பட்டது. ராமநத்தம் ஊராட்சி செயலா் பிரேம்குமாா் நன்றி கூறினாா்.