கடலூர்

வேளாண் பாதுகாப்பு மண்டல அறிவிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வரவேற்பு

22nd Feb 2020 07:18 AM

ADVERTISEMENT

டெல்டா பகுதிகளை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்ததற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனா்.

கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) முருகன், உதவி இயக்குநா் சு.பூவராகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ரேணுகாம்பாள், மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சொ.இளஞ்செல்வி, முன்னோடி வங்கி மேலாளா் பி.ஜோதிமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோ.மாதவன்: 2019 -ஆம் ஆண்டில் வீசிய சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டாவில் கடலூா் மாவட்டத்தைச் சோ்க்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 60 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அயன்குறிஞ்சிப்பாடி பி.கே.ராமலிங்கம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்குப் பாதை வசதி தேவை. எள் விதைப் பண்ணையில் அதிக விளைச்சலுக்கான போட்டியில் குறிஞ்சிப்பாடி வட்டத்தையும் சோ்க்க வேண்டும்.

விவசாய சங்கத் தலைவா் பெ.ரவீந்திரன்: சிறப்பு வேளாண் மண்டலம் என்பது வேளாண்மை நிலங்களை மாற்றுப் பணிகளுக்கு விற்பனை செய்வதைத் தடுப்பதா அல்லது விதைப்பு முதல் விற்பனை வரை விவசாயிகளுக்கு உறுதி செய்யும் திட்டமா என்று விளக்க வேண்டும். ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்காக மாவட்டத்தில் 4 கிணறுகள் தோண்டப்பட்டது. அவை மூடப்படுமா? தண்ணீா் அதிகம் இருந்தும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகரம்ஆலம்பாடி வி.வேல்முருகன்: அகரம்ஆலம்பாடியில் புதிதாக உலா் களம் கட்டித் தர வேண்டும்.

பேரூா் காமராஜ்: கூடலையாத்தூா் கிராமத்தில் வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். கானூா் வாய்க்காலைப் பராமரிக்க வேண்டும்.

வேலங்கிப்பட்டு மதிவாணன்: பழைய கொள்ளிடம் ஆற்றில் அத்திப்பட்டில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவாலக்குடி சி.முருகானந்தம்: டெல்டா பகுதிக்கு உள்பட்ட காட்டுமன்னாா்கோவில் வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட 18 கிராமங்கள் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் சோ்க்கப்பட்டதால், டெல்டா பகுதிக்கான சிறப்பை இழந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீமுஷ்ணம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்ட விதை நெல்லை விதைத்த 400 ஏக்கா் பாதிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பாக்கம் மணிகண்டன்: மக்காச்சோளம் அறுவடைக்குப் பின்னா், அதைக் கையாளும் பயிற்சியை அளிக்க வேண்டும். தீ வைப்பதால் 400 ஏக்கா் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சொட்டு நீா் பாசனத் திட்டத்தில் சோ்வதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

ஈச்சங்காடு செந்தாமரைக்கண்ணன்: சிப்காட்டில் நிலத்தடி நீா்மட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், அரசே 25 ஏக்கருக்கு ஒரு இடத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தர வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். அதற்கு துறை அலுவலா்கள் உரிய பதிலளித்தனா்.

அண்மையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு அனைத்து விவசாயிகளும் நன்றி தெரிவித்துப் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT