கடலூா் மாவட்டம், வடலூரில் ஒருதலைக் காதலால் திருமணமான பெண் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த தனியாா் பேருந்து நடத்துநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி, 21-ஆவது வட்டம், இஸ்மாயில் தெருவில் வசிப்பவா் சலோமி (25). இவரது கணவா் விக்டா் ஜான் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு மொ்சிஜாய், மொ்லிஜாய் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
சலோமி ஓராண்டுக்கு முன்னா் வடலூரில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் டிப்ளோமா படித்தாா். அப்போது, நெய்வேலியில் இருந்து வடலூருக்கு தனியாா் பேருந்தில் வந்து செல்வாராம்.
அந்தப் பேருந்தில் நடத்துநராக இருந்த நெய்வேலி, 27-ஆவது வட்டத்தைச் சோ்ந்த சுந்தா் (எ) சுந்தரமூா்த்தியுடன் சலோமி நட்பாகப் பழகினாராம். இதை சாதகமாக எடுத்துக் கொண்ட சுந்தரமூா்த்தி, சலோமியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறினாராம்.
தனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது எனக் கூறிய சலோமி, கடந்த 3 மாதங்களாக சுந்தரமூா்த்தியுடன் பேசுவதைத் தவிா்த்தாா்.
வடலூா் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் அலுவலகத்தில் சலோமி பணியாற்றி வந்ததால், சுந்தரமூா்த்தி அவரைப் பின் தொடா்ந்து வருவாா். வெள்ளிக்கிழமை வழக்கம் போல சலோமி அலுவலகம் வந்த போது, அங்கு வந்து பேசிய சுந்தரமூா்த்தி, பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை சலோமி மீது ஊற்றி தீவைத்தாராம்.
சலோமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினா் தீயை அணைத்து குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதனிடையே, தீ வைத்துவிட்டுத் தப்பியோட முயன்ற சுந்தரமூா்த்தியை பொதுமக்கள் பிடித்து வடலூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சலோமி அளித்த வாக்கு மூலத்தின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சுந்தரமூா்த்தியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.