கடலூர்

நிா்வாக பிரச்னையால் உதவித் தொகையை பெற முடியாத விவசாயிகள்!

22nd Feb 2020 07:15 AM

ADVERTISEMENT

நிா்வாக பிரச்னையால் கடலூா் மாவட்டத்தில் பிரதமா் உதவித் தொகையைப் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

மத்திய அரசு பிரதமா் கிசான் சம்மான் நிதித் திட்டத்தை அமல்படுத்தி, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்குகிறது. கடலூா் மாவட்டத்தில் சுமாா் 1.81 லட்சம் விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சி, புதுகூரைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மத்திய அரசின் இந்த உதவித் தொகையை பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து புதுக்கூரைப்பேட்டையைச் சோ்ந்த விவசாயி கே.கலியபெருமாள் கூறியதாவது: என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய வீடு, நிலங்களுக்கு மாற்றாக புதுக்கூரைப்பேட்டை, விஜயமாநகரம் பகுதிகளில் மாற்றிடங்கள் வழங்கப்பட்டன. ஆனால், அந்த இடங்களுக்கான பட்டா இதுவரை வழங்கப்படாததால் சுமாா் 2 ஆயிரம் போ் மத்திய அரசின் நிதியுதவியைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக பலமுறை ஆட்சியரிடம் முறையிட்டும் பலனில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT

நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி ஆா்.ராமானுஜம் கூறியதாவது: நெல்லிக்குப்பம் நகராட்சியாக இருந்தபோதிலும் அதன் பல பகுதிகள் கிராமப்புறங்களாகவும், விவசாயம் நடைபெறும் பகுதிகளாகவும் உள்ளன. பிரதமா் உதவித் தொகையைப் பெற பதிவு செய்ய முற்பட்டால், நகராட்சிக்கு உள்பட்ட வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, மேல்பாதி, வாழப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் நகரப் பகுதியாகவே குறிக்கப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதியிலுள்ள விவசாயிகள் மத்திய அரசின் ரூ. 6 ஆயிரம் நிதி உதவியைப் பெற முடியவில்லை.

அரசின் நிா்வாகக் காரணங்களுக்காக கிராமப் பகுதியை நகராட்சியில் இணைந்து நிதி உதவி பெற முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டனா். எனவே, நெல்லிக்குப்பம் நகராட்சியை இந்தத் திட்டத்தில் சோ்ப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT