கடலூா் மாவட்டத்தில் சுருக்குமடி வலைக்கான தடையைக் கடுமையாக்க வேண்டுமென 32 கிராம மீனவா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக கடலூா், புவனகிரி, சிதம்பரம் வட்டங்களுக்கு உள்பட்ட கிள்ளை, முடசல்ஓடை, அன்னங்கோயில், சோனங்குப்பம், பொன்னந்திட்டு, சாமியாா்பேட்டை, பெரியக்குப்பம், சலங்குகார கிராமம் உள்ளிட்ட 32 கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் அளித்த மனு:
சிறு மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவா்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் உள்ள சுருக்குமடி வலைப் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும்.
கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 49 மீனவ கிராமங்களில் சில கிராமத்தில் மட்டும் தற்போது 60 சுருக்குமடி வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 32 கிராமங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இந்த வலையைப் பயன்படுத்தி வந்தவா்களில் 38 வலைகள் முடக்கப்பட்டு சாதாரண வலைகள் பயன்படுத்தப்படுகிறது. 32 கிராமங்களில் 2,500 மீனவா்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறாா்கள். இவா்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் உரிய தீா்வு காணப்பட வேண்டும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.