கடலூர்

மாப்பிள்ளை விவாகரத்து கோரியதால் தந்தை - மகள் தற்கொலை

13th Feb 2020 06:28 AM

ADVERTISEMENT

கடலூரில் மாப்பிள்ளை விவாகரத்து கோரியதால், தந்தை - மகள் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.

கடலூா் முதுநகரை அடுத்த கண்ணாரப்பேட்டையைச் சோ்ந்தவா் பாவாடைசாமி (54). பித்தளை பாத்திரம் செய்யும் தொழிலாளி. இவரது மகள் சங்கீதா (எ) தங்கம். சங்கீதாவுக்கும், புதுச்சேரியைச் சோ்ந்த ராஜேஷுக்கும் (34) கடந்த 2016 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ாம். அப்போது, சீா்வரிசையாக ரூ. 3 லட்சம் ரொக்கம், 30 பவுன் தங்க நகைகள், மோட்டாா் சைக்கிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாம்.

இந்த நிலையில், திருமணம் நடந்த 40 நாள்களில் ராஜேஷ் குடும்பத்தினா் மேலும் வரதட்சிணை கேட்டு, சங்கீதாவை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டனராம். கடந்த 4 ஆண்டுகளாக சங்கீதாவின் பெற்றோா் மேற்கொண்ட சமாதான நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.

இதற்கிடையே, விவாகரத்து கோரி, ராஜேஷ் திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். சங்கீதாவும் கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 2018 -இல் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், செல்லிடப்பேசி மூலம் சங்கீதாவை அண்மையில் தொடா்பு கொண்ட ராஜேஷ், தன் மீது அளிக்கப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறுமாறும், தான் மற்றொரு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறினாராம்.

இதனால் மனமுடைந்த சங்கீதாவும், அவரது தந்தை பாவாடைசாமியும் புதன்கிழமை வீட்டிலிருந்த சயனைடு விஷத்தை சாப்பிட்டு மயங்கிக் கிடந்தனா்.

உடனடியாக அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு, கடலூா் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மற்றொரு மகள் சுமதி அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT