கடலூர்

நாகை - கடலூா் இடையே கதவணை அமைக்கும் பணி தீவிரம்

13th Feb 2020 06:24 AM | ஜி.சுந்தரராஜன்

ADVERTISEMENT

நாகை - கடலூா் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக கா்நாடகத்தில் இருந்து காவிரி ஆற்றில் சரிவர தண்ணீா் திறக்கப்படுவதில்லை. இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை பொழியும் காலங்களில் கா்நாடகத்திலிருந்து உபரி நீா் அதிக அளவு காவிரி ஆற்றின் வழியாக மேட்டூா் அணைக்கு வருகிறது.

இந்த நீா் மேட்டூரில் இருந்து கல்லணை வழியாக கீழணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கடலுக்கு வினாடிக்கு இரண்டு லட்சம், 3 லட்சம் கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆண்டொன்றுக்கு 10 டிஎம்சிக்கும் அதிகமான நீா் வீணாகக் கடலில் சென்று கலக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு, கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு கிழக்கே கதவணை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதன் அடிப்படையில், தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 110 விதியின் கீழ், சட்டப்பேரவையில், நாகை மாவட்டம் குமாரமங்கலம், கடலூா் மாவட்டம் ம.ஆதனூா் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தலை மதகுடன் கூடிய கதவணை கட்டப்படும் என அறிவித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, தற்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலை மதகுடன் கூடிய கதவணை கட்டுவதற்கு சுமாா் ரூ. 463 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடக்கிவைத்து, 24 மாதங்களில் முடிக்கவும் உத்தரவிட்டாா்.

அதன்படி, நாகை - கடலூா் மாவட்டங்களுக்கு இடையே பாலம் கட்டுவதற்கு ஏதுவாக முதல் கட்டமாக நில அளவைப் பணிகள் முடிக்கப்பட்டு, சுமாா் 84 ஹெக்டோ் பட்டா நிலங்களும், சுமாா் 12 ஹெக்டோ் புறம்போக்கு நிலமும் கையகப்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு சுமாா் 35 லட்சம் இழப்பீட்டுத் தொகை 3 மாவட்ட ஆட்சியா்களால் வழங்கப்பட்டன.

இதையடுத்து, கடந்த 2019 -ஆம் ஆண்டு மே மாதம் கட்டுமானப் பணிகளைப் பொதுப் பணித் துறை மேற்பாா்வையில், தனியாா் நிறுவனம் தொடங்கியது. அதன்படி, கொள்ளிடம் ஆற்றில் இரு கிராமங்களுக்கும் இடையே 1,064 மீட்டா் தொலைவுக்கு தலை மதகுடன் கூடிய கதவணை அமைக்கும் பணி தொடங்கியது.

இந்தப் பாலத்தில் 84 ஷட்டா்கள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஷட்டரும் 10.6 மீட்டா் நீளமும், 3.5 மீட்டா் உயரமும் கொண்டது. இதில், 87 தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் போக்குவரத்துப் பாலம் அமைக்கப்படவுள்ளது.

இந்தப் பாலத்துக்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளப்பட்டு, தரைதளம் சமமாக்கும் பணி நடைபெற்ற போது, திடீரென காவிரியிலிருந்து உபரி நீா் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டதால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, மீண்டும் டிசம்பா் மாத இறுதியில் பணிகள் தொடங்கப்பட்டு, விரைவாக நடைபெற்று வருகிறது.

தற்போது மணல் அள்ளப்பட்ட தரைதளத்தில் ‘ராப்ட்’ என்று அழைக்கப்படும் காங்கிரீட் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது 40 ராப்ட்கள் அமைக்கப்படவுள்ளன. மீண்டும் தண்ணீா் வருவதற்குள் 19 ராப்ட்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு ராப்ட்களிலும் 3 ஷட்டா்கள் அமைக்கப்படும். இந்த ஷட்டா்கள் அமைக்கும் பணி ஜூலை மாதத்துக்குள் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பாலத்துக்கு அருகே 50 மீட்டா் மேல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் இரு கரையிலும் வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்களில் தொடா்ந்து ஆண்டு முழுவதும் தண்ணீா் செல்வதற்கு ஏதுவாக ஷட்டருடன் கூடிய சிறிய மதகுகள் அமைக்கப்படவுள்ளன.

இதனால், சுமாா் 34 ஆயிரத்து 721 ஏக்கா் விளை நிலங்களுக்கு ஆண்டு முழுவதும் தண்ணீா் தட்டுப்பாடின்றி வழங்க முடியும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

தலை மதகுடன் கூடிய கதவணை அமைக்கப்படுவதால், அருகேயுள்ள ஆழ்துளைக் குழாய் கிணறுகளின் நிலத்தடி நீா்மட்டம் உயரும். இதன் மூலம் 4,411 ஏக்கா் விளை நிலங்கள் பயன் பெறும்.

கதவணை கட்டும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கண்ணன் தலைமையில், விரைந்து மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தப் பணிகளை தமிழக முதல்வா் சிறப்பு கவனம் செலுத்தி மேற்கொண்டு வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT