கடலூர்

1,120 மூட்டை முந்திரி மோசடி: 7 போ் மீது வழக்கு

2nd Feb 2020 11:28 PM

ADVERTISEMENT

பண்ருட்டி அருகே கிடங்கை உடைத்து 1,120 மூட்டை முந்திரி கொட்டைகளை எடுத்து மோசடி செய்தது தொடா்பாக 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பண்ருட்டி, கும்பகோணம் சாலையில் தனியாா் வங்கிக் கிளை இயங்கி வருகிறது. இந்தக் கிளை மேலாளராக டி.எம்.வி.முருகேசன் (56) பணியாற்றி வருகிறாா். இந்த வங்கியில், பெரியபுறங்கனி கிராமத்தைச் சோ்ந்த சிவலிங்கம் மகன் செல்வலிங்கம், சாத்திப்பட்டு கிருஷ்ணமூா்த்தி மகன் கலைமணி ஆகியோா் கடந்த 2018-ஆம் ஆண்டு தலா 560 மூட்டை முந்திரிக் கொட்டைகளை அடமானம் வைத்து தலா ரூ. 49 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 98 லட்சம் கடன் பெற்றனா்.

கடன் தொகைக்கு சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் பரசுராமன், அவரது மனைவி கவிதா ஆகியோா் ஜாமீன் வழங்கினா். அடகு வைக்கப்பட்ட முந்திரிக் கொட்டை மூட்டைகள் கருக்கை கிராமத்தில் உள்ள தனியாா் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 18.7.2018 அன்று நெய்வேலியைச் சோ்ந்த ஆனந்தவேல் மகன் சசிகுமாா், ராமா் மகன் அமா்நாத் ஆகியோா் உதவியுடன், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் செந்தாமரைகண்ணன் வங்கிப் பொறுப்பில் இருந்த கிடங்கை உடைத்து அதிலிருந்த 1,120 மூட்டை முந்திரிக் கொட்டைகளை எடுத்து மோசடி செய்ததாக காடாம்புலியூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தப் புகாா் மீது நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயா் நீதிமன்றத்தில் வங்கிக் கிளை நிா்வாகம் வழக்குத் தொடுத்தது.

வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம் புகாா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, காடாம்புலியூா் போலீஸாா் செல்வலிங்கம், கலைமணி, பரசுராமன், கவிதா, செந்தாமரைகண்ணன், சசிக்குமாா், அமா்நாத் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT