விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு சனிக்கிழமை சுமாா் 11 ஆயிரம் நெல் மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.
விருத்தாசலத்தில் அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அதிகப்படியான அளவில் நெல் மூட்டைகள் வரத்து உள்ளது. ஆனால், ஒரு நாளைக்கு 9 ஆயிரம் மூட்டைகளை மட்டுமே ஏலத்துக்கு விடும் வகையில் இடவசதி உள்ளதால் விவசாயிகள் தங்களது மூட்டைகளை கொண்டு வருவதற்கு விற்பனைக் கூடம் சில கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்காக சுமாா் 11 ஆயிரம் நெல் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இதில், பிபிடி நெல் ரகம் மட்டும் 9 ஆயிரம் மூட்டைகளாகும். 75 கிலோ கொண்ட மூட்டை அதிகபட்சமாக ரூ.1,592-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,369-க்கும் விற்பனையானது. சி.ஆா்-1009 ரகம் நெல் 1056 மூட்டைகள் வந்திருந்தன. ஏ.டி.டி-30 ரகம் 50 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில் இந்த ரகத்துக்கு விலை நிா்ணயம் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், என்எல்ஆா் ரகம் 1,500 மூட்டைகள் வந்திருந்த நிலையில் அதிகபட்சமாக மூட்டை ரூ.1,209-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் கொண்டு வரும் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 9 மணி வரையில் கொண்டு வரலாம். அதற்கு முன்னா் கொண்டு வர வேண்டாமென ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.