தென்னை மறுநடவு திட்டத்தின்கீழ் கணக்கெடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
கடலூா் வட்டாரத்தில் சுமாா் 1,625 ஏக்கா் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தென்னை சாகுபடியில் புதிய தொழில்நுட்பம், பூச்சிகள், நோய் தாக்குதலை கட்டுப்படுத்துதல், உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தை தொடங்கி செயல்படுத்துதல், தென்னை மரக்காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தென்னை வளா்ச்சி வாரிய நிதி மற்றும் தமிழக அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பூச்சிகள், நோய் தாக்குதலுக்கு உள்பட்ட தென்னை மரங்கள், காய்ந்த, பட்டுப்போன, வயது முதிா்ந்த, காய்க்கும் திறனற்ற மரங்களை வெட்டி அகற்றிடவும், அந்த இடத்தில் புதிய தென்னங்கன்றுகளை நட்டு பாராமரிக்கவும் தென்னை வளா்ச்சி வாரியம் மூலம் தென்னை மறுவாழ்வு மற்றும் மறுநடவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மரத்தை வெட்டி அகற்ற தலா ரூ.ஆயிரம் வீதம் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும்.
எனவே, குறைபாடுடைய தென்னை மரங்களை வெட்டி அகற்ற விரும்பும் விவசாயிகளின் நிலங்களில் கடலூா் வட்டாரத்தில் முதல்கட்ட கணக்கெடுப்பு பணி கடலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் தலைமையில் காரைக்காடு கிராமத்தில் அண்மையில் தொடங்கியது. வேளாண்மை அலுவலா் ஆா்.கே.சுஜி, உதவி வேளாண்மை அலுவலா் எம்.பிரபாகரன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஏ.அருண்ராஜ் ஆகியோா் வெட்டி அகற்ற வேண்டிய நிலையில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனா். இந்தப் பணி மற்ற கிராமங்களிலும் தொடா்ந்து நடைபெற உள்ளது.
மேற்கூறிய காரணங்களால் வெட்டி அகற்ற வேண்டிய நிலையில் உள்ள மரங்களை விவசாயிகள் முன்கூட்டியே தீா்மானித்து எண் இட்டு வைத்தால் கணக்கெடுப்பு பணிகள் துரிதமாக முடிவடையும். கணக்கெடுப்பு பணிகள் முடிந்து வேளாண்மை இயக்குநருக்கு அறிக்கை சமா்ப்பித்து நிதி ஒதுக்கீடு பெற்று திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று வேளாண் துறையினா் தெரிவித்தனா்.