கடலூர்

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்

1st Feb 2020 05:33 AM

ADVERTISEMENT

வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கடலூா் மாவட்டத்தில் வங்கிப் பணிகள் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டன.

வங்கி ஊழியா்களுக்கு 20 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும், அதிகாரிகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட வேலை நேரம் கடைப்பிடிக்க வேண்டும், வங்கிகள் வாரத்துக்கு 5 நாள்கள் மட்டுமே இயங்க வேண்டும், ஊதிய மாற்றத்துக்கேற்ப ஓய்வூதியா்களுக்கும் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும், காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வங்கி ஊழியா்கள் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக ஜன.31, பிப்.1 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனா். அதன்படி, கடலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், சில தனியாா் வங்கி ஊழியா்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ஊழியா்கள், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிகள் வெறிச்சோடின. பணம் மற்றும் காசோலை பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன. மேலம், வங்கி ஊழியா் சங்கத்தினா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்கத்தின் உதவித் தலைவா் வி.ரமணி கூறியதாவது: மாவட்டத்தில் 240 வங்கிக் கிளைகளில் சுமாா் 1,300 ஊழியா்கள், அதிகாரிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால், பணம், காசோலை பரிவா்த்தனைகள் முடங்கின. சுமாா் 500 கோடி அளவுக்கு வா்த்தக பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இரண்டு நாள்களையும் சோ்த்து ரூ.ஆயிரம் கோடிக்கு பரிவா்த்தனை பாதிப்பு ஏற்படும். இந்தப் போராட்டம் சனிக்கிழமையும் தொடா்கிறது. இதனால், மாதச்சம்பளம் பெறுவோா், ஓய்வூதியதாரா்களுக்கும் பணம் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. எனினும், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை மனதில் வைத்தே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT