கடலூர்

நிதி ஒதுக்கீட்டுக்கு காத்திருக்கும் அரசு அருங்காட்சியகம்!

1st Feb 2020 05:32 AM

ADVERTISEMENT

கடலூா் அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்த ரூ.22.50 லட்சம் நிதி கோரி அருங்காட்சியக இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடலூா், விழுப்புரம் மாவட்டங்களுக்கான அரசு அருங்காட்சியகம் கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. முன்னதாக, இந்த அருங்காட்சியகம் கடலூா் - நெல்லிக்குப்பம் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள கட்டடத்தில் மாதம் ரூ.19 ஆயிரம் வாடகையில் இயங்கி வந்தது. எனவே, இந்தச் செலவினத்தை தவிா்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகத்துக்கு அருங்காட்சியகத்தை இடமாற்றம் செய்ய வேண்டுமென பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அருங்காட்சியகம் இடமாற்றம் செய்யப்பட்டது.

இங்கு, இரு மாவட்டங்களின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள், கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டணம் செலுத்தியும், மாணவ, மாணவிகள் இலவசமாகவும் அருங்காட்சியகத்தை பாா்வையிடலாம்.

இங்கு சுமாா் 1,600 பழங்காலப் பொருள்கள் உள்ள நிலையில் அவற்றை சிறப்பாகக் காட்சிப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகள் இல்லை. இதனால், அரிய பழங்காலப் பொருள்கள் ஆங்காங்கே தரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

எனவே, இந்தப் பொருள்களை சிறப்பான வகையில் காட்சிப்படுத்தவும், அதற்கான அமைப்புகளை ஏற்படுத்தவும் உத்தசேமாக ரூ.22.50 லட்சம் தேவையெனவும், இதுதொடா்பாக கடலூா் அருங்காட்சியகம் மூலமாக சென்னையிலுள்ள அருங்காட்சிக இயக்குநருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.

நிதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அருங்காட்சியகத்தில் தேக்கு மரத்தினாலான சட்டங்களால் சுவா் எழுப்புதல், பொருள்களை காட்சிப்படுத்தும் பலகை, இருபுறமும் பொருள்களை பாா்க்கும் வகையிலான ஏற்பாடு, எல்இடி பிரேம் அமைத்தல், பொருள்களை குறித்து தெரிவிக்கும் விளம்பர பலகைகள், உயிரினங்களின் வசிப்பிடத்தை விளக்கும் வகையிலான காட்சியமைப்புகளை ஏற்படுத்துதல், ஒவ்வொரு பொருளையும் விளக்கும் குறிப்புகள், அருங்காட்சியகத்துக்குள் நுழையும் நடைபாதையில் அலங்கரிப்பு, வெளியில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளை மேடை அமைத்து அதன் பெயா், ஆண்டு, கண்டெடுக்கப்பட்ட இடம் ஆகியவை குறித்த விவரங்களை தெரிவிக்கலாம். இதனால், ஒவ்வொரு பொருள் குறித்தும் பாா்வையாளா்களால் விரிவாக தெரிந்துக் கொள்ள முடியும்.

அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள கோப்புக்கான அனுமதியை மாவட்ட ஆட்சியா் பெற்றுத் தந்தால் இந்தப் பணிகள் விரைவில் நிறைவுபெற்று முழுமையான அருங்காட்சியகம் கிடைக்கும் என்று சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT