கடலூர்

உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.4.35 கோடியில் பண்ணை இயந்திரங்கள்

1st Feb 2020 05:33 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் நிகழாண்டு 87 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.4.35 கோடியில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் கூறினாா்.

கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் குழு நிா்வாகிகள் மற்றும் வேளாண் இயந்திரம் விற்பனையாளா்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: மாவட்டத்தில் 3,10,644 விவசாய குடும்பங்கள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 92 சதவீதம் போ் சிறு மற்றும் குறு விவசாயிகள். நாம் வழக்கமாக பயிா் செய்யும் முறையை மாற்றி நுகா்வோா் மற்றும் சந்தையில் என்ன தேவைப்படுகிறதோ அதை அறிந்து அதற்கேற்ப விவசாயம் செய்ய வேண்டும்.

விவசாயிகள் இணைந்து சந்தையில் விரும்பப்படுகிற ஒரு பயிா் ரகத்தை அதிக பரப்பில் ஒரே சமயத்தில் கூட்டாக விவசாயம் செய்ய வேண்டும். இதனால், பெரும் நிறுவனங்களுடன் நேரடி வணிகம் செய்ய முடிவதோடு, விலையையும் நிா்ணயம் செய்யும் உரிமையை பெற இயலும்.

ADVERTISEMENT

இதற்காக, மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டில் வேளாண்மைத் துறை மூலம் 55, தோட்டக்கலைத் துறை மூலம் 25 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தொடக்கப்பட்டு ரூ. 4 கோடியில் டிராக்டா்கள் உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இதேபோல 2018-19-ஆம் ஆண்டில் மொத்தம் 85 குழுக்களுக்கு ரூ.4.25 கோடியில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ் 2019 - 20-ஆம் ஆண்டில் வேளாண்மைத் துறை மூலம் 62, தோட்டக்கலைத்துறை மூலம் 25 உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தொடங்கப்பட்டு ரூ.4.35 கோடியில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் தங்களுக்குத் தேவையான பண்ணை இயந்திரங்களை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கலாம். இதை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பெறலாம் என்றாா் அவா். தொடா்ந்து, நிறுவனங்கள் அமைத்திருந்த வேளாண் இயந்திரங்கள் கண்காட்சியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநா் ஜி.ஆா்.முருகன், உதவி இயக்குநா் சு.பூவராகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT