கடலூா்/சிதம்பரம்: கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்டத்தில் 11 இடங்களில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக போக்குவரத்து தொழிலாளா்களிடம் பறிக்கப்பட்ட விடுப்பையும், சம்பளத்தையும் திரும்ப வழங்க வேண்டும், மாணவா்கள் உள்பட பல்வேறு பிரிவினருக்கும் கிடைத்து வரும் இலவச பேருந்து பயண உரிமையை பறிக்கக் கூடாது, போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த அரசு நிதி வழங்க வேண்டும், தனியாா் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு உடனடியாக பணப் பயன்களை வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பஞ்சப்படி உள்ளிட்ட நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து போக்குவரத்து பணிமனைகளின் முன் மனு வழங்கி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அனைத்து தொழிற்சங்கத்தினா் சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, கடலூரிலுள்ள போக்குவரத்து பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி உள்ளிட்ட 11 போக்குவரத்து பணிமனைகளின் முன்பும் தொமுச, சிஐடியூ, மறுமலா்ச்சி தொழிலாளா் சங்கம், ஐஎன்டியூசி, ஏஏஎல்எல்எப் ஆகிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம்: சிதம்பரம் மணலூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைப் பொதுச் செயலா் ராஜேந்திரன் (தொ.மு.ச) தலைமை வகித்தாா். சிஐடியூ மண்டல பொதுச் செயலா் மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். எம்.எல்.எஃப் பணிமனை செயலா் காசிநாதன், அம்பேத்கா் தொழிற்சங்க துணைச் செயலா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனா்.