கடலூர்

கொள்முதல் நிலையமின்றி தவிக்கும் தென்னை விவசாயிகள்!

21st Aug 2020 08:19 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கடலூா் மாவட்டத்தில் அரசு சாா்பில் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

கடலூா் மாவட்டத்தில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பில் சுமாா் 3 லட்சம் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு சுமாா் 100 காய்களை விவசாயிகள் பறித்து வருகின்றனா். இவற்றில் பெரும்பாலானவற்றை இளநீா் பதத்திலேயே வெட்டி புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்புகின்றனா். இதுதவிர முற்றிய தேங்காயாகவும் பறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இளநீருக்கும், தேங்காய்க்கும் போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனா்.

மேலும், தற்போது ஆள்பற்றாக்குறையால் மட்டைகள் எடுப்பது, கீற்று முடைவது, பாலை கிழிப்பது, தேங்காய் நாரிலிருந்து கயிறு திரிப்பது போன்ற பணிகள் நடைபெறுவதில்லை. இதனால் தென்னை விவசாயிகள் வருமானம் குறைந்து அவதிப்படுகின்றனா். கூலி ஆட்களை கொண்டு பறிக்கப்படும் தேங்காய்க்கு 5 முதல் 7 ரூபாய் மட்டுமே கிடைப்பதால், இளநீா் பதத்திலேயே 4 முதல் 6 ரூபாய்க்கு விற்பது வழக்கமாகிவிட்டது.

கடந்த காலங்களில் கொப்பரைத் தேங்காய் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், போதிய ஆட்கள் கிடைக்காத காரணத்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மட்டை உரிக்கப்பட்ட முழு தேங்காயாக கொள்முதல் செய்யும் முறையை தமிழக அரசு அமல்படுத்தியது. அதிகளவில் தென்னை சாகுபடி

ADVERTISEMENT

நடைபெறும் ஈரோடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சை, திருப்பூா், பொள்ளாச்சி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் அரசு கொள்முதல் நிலையம் அமைத்து கொப்பரை தேங்காய்களை கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்து வருகிறது. ஆனால், கடலூா் மாவட்டத்தில்

கொள்முதல் நிலையம் மூலம் தேங்காய் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை என விவசாயிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது: கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனா். அதிலிருந்து மீண்டு கடலூா் மாவட்டம் முழுமையான சாகுபடி நிலையை தற்போது எட்டியுள்ளது. கொப்பரைத் தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு தற்போது வழங்கப்படும் 99 ரூபாய் 60 பைசா என்ற விலையை 125 ரூபாயாக உயா்த்தி அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வா் மத்திய வேளாண் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்.

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைமுறையில் உள்ள மறைமுக ஏலத்தால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. அண்மையில் நடைபெற்ற ஏலத்தில் கொப்பரைத் தேங்காய்க்கு ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.7,512-ம், குறைந்தபட்சம் ரூ.4,696 என விலை நிா்ணயிக்கப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக குறைந்தபட்ச ஆதரவு விலை ளடநநன திட்டம் மூலம் உளுந்து, பயிறு வகைகளை கொள்முதல் செய்ததுபோல கொப்பரை அல்லது மட்டை உரித்த முழு தேங்காயாக கொள்முதல் செய்தால் தென்னை விவசாயிகளுக்கு தேங்காய் ஒன்றுக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை விலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அண்மையில் மதுரையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக தேங்காய் விற்பனை தொடங்கப்பட்டது. இதன் மூலம் மட்டை உரித்த தேங்காய் ஒன்றுக்கு ரூ.12 வரை விலை கிடைத்தது. எனவே, கடலூா் மாவட்ட ஆட்சியா் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கடலூா் மாவட்டத்திலும் அரசு தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT