கடலூா் மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயத்தில் வேலையாள்கள் பற்றாக்குறை, காலத்தே பயிா் செய்தலுக்கு ஏதுவாக டிராக்டா்கள், நெல் நாற்று நடவு இயந்திரங்களுக்கு தலா ரூ. 5 லட்சம், வைக்கோல் கட்டும் இயந்திரம் ரூ. 9 லட்சம், பல்வகை கதிரடிக்கும் இயந்திரம் ரூ. 2.50 லட்சம், சட்டிக் கலப்பை, கொத்துக் கலப்பை, சுழல் கலப்பைகளுக்கு ரூ. 50 ஆயிரம், விதைப்புக் கருவி ரூ. 78 ஆயிரம், களையெடுக்கும் கருவி ரூ. 63 ஆயிரம், பவா் டில்லா் ரூ. 85 ஆயிரம், அறுவடை இயந்திரங்கள் ரூ. 11 லட்சம், தென்னை ஓலைகளைத் துகளாக்கும் கருவி ரூ. 63 ஆயிரம், வைக்கோல் கூட்டும் கருவி ரூ. 1.50 லட்சம், புதா் அகற்றும் கருவி ரூ. 40 ஆயிரம், தட்டை வெட்டும் கருவி ரூ. 28 ஆயிரம், நிலக்கடலைத் தோண்டும் கருவி ரூ. 75 ஆயிரம், கரும்பு சோகை துகளாக்கும் கருவி ரூ. 1.25 லட்சம் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.
விவசாயிகள், கிராமப்புற இளைஞா்கள் (தொழில் முனைவோா் சான்றிதழ் பெற்றிருப்பின்) விவசாயக் கூட்டுறவு சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், பஞ்சாயத்துக் குழுக்களுக்கு வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை ரூ. 25 லட்சத்தில் அமைக்க ஏதுவாக 40 சதவீதம் மானிய அடிப்படையில், அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் நிறுவ ரூ. 1.50 கோடியில் அதிகபட்சமாக ரூ. 60 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். மானியங்களைப் பெற விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின்னா், மத்திய அரசின் இணையதளமாக இணைக்கப்பட்டு நேரடியாக மானியத்தைப் பெறலாம். தனிப்பட்ட வேளாண் இயந்திரங்களைப் பெற ஏதுவாக நிகழாண்டில் ரூ. 1.77 கோடியும், 3 வாடகை மையங்கள் அமைக்க ரூ. 30 லட்சமும் மாவட்டத்துக்குக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.