மண் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உர விதைகள் விளைவிக்கப்பட்ட வயலில் வேளாண் துறையினா் ஆய்வுசெய்தனா்.
தமிழ்நாடு பாசன நவீன வேளாண்மைத் திட்டத்தின் கீழ் வேளாண் துறை மூலம் பசுந்தாள் உர சாகுபடி, திருந்திய நெல் சாகுபடி, தரிசில் உளுந்து சாகுபடி குறித்த செயல் விளக்கங்கள் கடலூா் வட்டாரத்தில் பெண்ணையாறு வடிநிலத்துக்கு உள்பட்ட 12 கிராமங்களில் அளிக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக நிகழ் சம்பா சாகுபடிக்கு முன்னதாக மண்வளத்தை மேம்படுத்த ஏதுவாக தக்கைப்பூண்டு பசுந்தாள் உர விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு செயல் விளக்கங்கள் அமைக்கப்பட்டன.
இதன்படி, தூக்கணாம்பாக்கம் கிராமத்தில் விவசாயி க.புண்ணியமூா்த்தியின் வயலில் செழித்து வளா்ந்துள்ள 25 நாள் வயது தக்கைப்பூண்டுகளை கடலூா் வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன், கடலூா் வேளாண்மை அலுவலா் ஞா.சுகன்யா ஆகியோா் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.
ஆய்வின்போது உதவி வேளாண்மை அலுவலா் ஜி.ரஜினிகாந்த், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி.இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா். தொடா்ந்து பயிா்களை சாகுபடி செய்வதால் மண்வளம் குறையும் தருவாயில் இடையில் தக்கைப்பூண்டு சாகுபடி செய்து அவை பூக்கும் தருணத்துக்கு முன்னா் நிலத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்வளம் மேம்பட்டு, அடுத்து விளைவிக்கப்படும் பயிரானது கூடுதல் மகசூல் பெற உதவிகரமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.