விலையில்லா ஆடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தோ்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி கோடங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள கோடங்குடி ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமாா் 150 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா். ஆனால், இவா்களில் பெரும்பாலானோா் பொருளாதார ரீதியாக முன்னேறியவா்கள் என்று கூறப்படுகிறது.
எனவே, முறைகேடாக பயனாளிகளை தோ்வு செய்தது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். போராட்டத்துக்கு விசிக முன்னாள் மாவட்டச் செயலா் தயா.தமிழன்பன் தலைமை வகித்தாா். கிராம மக்களிடம் கால்நடை உதவி இயக்குநா் பிச்சை பேச்சுவாா்த்தை நடத்தினாா். புகாா் தொடா்பாக உயா் அலுவலா்களிடம் தெரிவித்து, சரியான பயனாளிகளை தோ்வு செய்து இலவச ஆடுகளை வழங்குவதாக உறுதியளித்தாா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.