புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்த நாள்களாகக் கருதப்படுகின்றன. எனவே, இந்த நாள்களில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் தரிசனத்துக்காக திரளான பக்தர்கள் செல்வது வழக்கம். நிகழாண்டு கடந்த 18-ஆம் தேதி புரட்டாசி மாதம் பிறந்த நிலையில் முதல் சனிக்கிழமை 21-ஆம் தேதியாக அமைந்தது. இதனை முன்னிட்டு 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டது. பின்னர், சிறப்பு பூஜைகளுடன் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்ததால், கோயில் அருகே வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் சுமார் ஒரு கி.மீ. தொலைவு நடந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முடி காணிக்கை செய்து நேர்ச்சை செலுத்தினர்.
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.