கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, பெண்ணாடத்தில் கரும்பு விவசாயிகள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கடந்த 2017-18-ஆம் ஆண்டு விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்தனர். ஆனால், அதற்காக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான பணத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனவாம்.
எனவே, கரும்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் வங்கியில் கடன் பெற்ற ஆலை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலைத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 12 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் பெண்ணாடத்தில் உள்ள சர்க்கரை ஆலை முன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் துணைச் செயலர் ஜெயபால் தலைமை வகித்தார். பொதுச் செயலர் ரவீந்திரன், மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாநிலச் செயலர் ராஜேந்திரன், வட்டச் செயலர் மகாலிங்கம் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, தங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால் வருகிற அக். 3-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.