கடலூரில் 14 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு திங்கள்கிழமை திருமணம் செய்துவைக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் புதுவாழ்வு நலச் சங்கம், டிசம்பர்-3 இயக்கம், இந்திய தொழுநோய் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சிகளை கடலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தியதில் 14 ஜோடிகள் தேர்வாகினர். இவர்களில் கடலூர் மாவட்டத்திலிருந்து 5 ஜோடிகளும், ஈரோட்டிலிருந்து 6 ஜோடிகளும், திண்டுக்கல்லில் இருந்து 3 ஜோடிகளும் தேர்வாகினர். இவர்களுக்கான இலவச திருமண விழா கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயிலின் முன் உள்ள மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, தமிழில் மந்திரம் ஓதி 14 ஜோடிகளுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தி சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார்.
விழாவில், மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஏற்பாட்டின்பேரில் 14 ஜோடிகளுக்கும் தாலிக்காக தலா 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் 18 வகையான சமையல் பாத்திரங்கள், 2 மாதங்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்களும் சீர்வரியாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலர் ஆர்.குமரன், எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் ஜி.ஜெ.குமார், நலச் சங்கத் தலைவர் பொன்.சண்மும், டிசம்பர்-3 இயக்க மாநில பொதுச் செயலர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் வீ.சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை
வழங்கினர்.