காஷ்மீரில் உயிரிழந்த தமிழக வீரர் ஆரோக்கியதாஸின் உடல் அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் ராணுவ மரியாதையுடன் திங்கள்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சி.தண்டேஸ்வரநல்லூர் ராயர் கார்டன் பகுதியைச் சேர்ந்த சவுரிமுத்து மகன் ஆரோக்கியதாஸ் (51). இந்திய துணை ராணுவப் படையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை (செப். 15) அதிகாலை ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர், சிதம்பரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு திங்கள்கிழமை காலை கொண்டுவரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், ஆரோக்கியதாஸின் உடல் சிதம்பரம் புறவழிச் சாலை பகுதிக்கு அடக்கம் செய்ய கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு, துணை ராணுவப் படை அதிகாரி திவாகர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் 21 குண்டுகள் முழங்கி ராணுவ மரியாதை செலுத்தினர். இதையடுத்து, ஆரோக்கியதாஸின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, அவரது உடலுக்கு சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.