சிதம்பரம் ஓமக்குளத்தைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் திங்கள்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
சிதம்பரம் நகராட்சி, 26-ஆவது வார்டில் ஓமக்குளம் அமைந்துள்ளது. சிலர் இந்தக் குளத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்பேரில் ஓமக்குளம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சார்பில் அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சிப் பொறியாளர் மகாதேவன் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்பில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. இதையொட்டி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாடி வீடுகள் உள்ளிட்ட 84 வீடுகள் இடிக்கப்பட்டன.
முன்னதாக, வீடுகளை இடிக்க அந்தப் பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வீடுகளை காலி செய்ய கூடுதல் கால அவகாசம் கோரினர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் சிதம்பரம் ஞானபிரகாசம் குளம், நாகச்சேரி குளங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.