கடலூர்

கல்லூரிப் பேருந்து கவிழ்ந்ததில்  20 மாணவிகள் காயம்

17th Sep 2019 06:52 AM

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே கல்லூரிப் பேருந்து கவிழ்ந்ததில் 20 மாணவிகள் திங்கள்கிழமை காயமடைந்தனர்.
தொழுதூர் அருகே தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. திங்கள்கிழமை காலை பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். தொழுதூர் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்திலிருந்த மாணவிகள் வெண்கரும்பூரைச் சேர்ந்த மகேந்திரன் மகள் மகாலட்சுமி (18), கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகள் சாருமதி (21), பெண்ணாடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சுமிதா (19), சிவக்குமார் மகள் சிவரஞ்சனி (20), ஆவினன்குடியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி அருணா (18)  உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர். இவர்களில், கார்மாங்குடியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி (20), இந்தக் கல்லூரியில் பிசிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் 8 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்த மாணவிகளை அந்தப் பகுதி மக்கள் மீட்டு தொழுதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பலத்த காயமடைந்த 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து ராமநத்தம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT