கடலூர்

ஊரக புத்தாக்கத் திட்ட விளக்கக் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

13th Sep 2019 07:21 AM

ADVERTISEMENT

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் அனைத்துத் துறையினர் பங்கேற்ற திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது  
கடலூர் மாவட்டத்தில் அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, குமராட்சி, மேல்புவனகிரி, பரங்கிப்பேட்டை ஆகிய 6 ஒன்றியங்களுக்கு உள்பட்ட 280 ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 
இந்தத் திட்டத்தின் தொடக்க நிலை செயல்பாடாக கடலூர் மாவட்டத்தில் தற்போதுள்ள வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா தொழில் வாய்ப்புகள், புதிதாக மேற்கொள்ள வாய்ப்புள்ள தொழில்களை கண்டறிவதற்காக மாவட்ட அளவிலான தொழில் பகுப்பாய்வு செயல்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள வளங்களை கண்டறிய ஏதுவாகவும், திட்டம் குறித்து விளக்கிடவும், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில், பல்வேறு துறையினர் பங்கேற்ற திட்ட விளக்கக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அனைத்துத் துறைகளும் தேவையான புள்ளி விவரங்களை அளித்து தொழில் பகுப்பாய்வு அறிக்கை தயார் செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இப்புதிய திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதுடன் அவர்களது பொருளாதாரம் மேம்பட அனைத்துத் துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தினார்.
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட துணை செயலாக்க அலுவலர் ஜெய்கணேஷ் திட்டத்தின் நோக்கம் குறித்தும், கடலூர் மாவட்டத்தின் வளங்களை கண்டறிய அனைத்துத் துறைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் விளக்கிக் கூறினார். 
நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட இளநிலை தொழில்நுட்பவியலர் நவின்குமார் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். உதவித் திட்ட  அலுவலர் ஜெ.விஜயகுமார் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT