கடலூர்

அமெரிக்க பல்கலை.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

13th Sep 2019 07:17 AM

ADVERTISEMENT

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், உலகளவில் முதல் 20 பல்கலைக்கழகங்களில் ஒன்றான, அமெரிக்காவின் நியூயார்க் கார்னல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் பணிகளில் ஈடுபடும் பொருட்டு கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
துணைவேந்தர் வே.முருகேசன் முன்னிலையில் நியூயார்க் கார்னல் பல்கலைக்கழக வேளாண்மை மற்றும் வாழ்வியல் அறிவியல் புல முதல்வர் கத்தரின், பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் வேளாண்புல முதல்வர் சாந்தா கோவிந்த், ஆராய்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர் ராம. கதிரேசன், பல்கலைக்கழக சர்வதேச கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், துணைவேந்தர் வே.முருகேசன் கூறியதாவது:
இந்த ஒப்பந்தம் வாயிலாக ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதார மற்றும் ஊட்டச்சத்து மேம்பாடு, வெளிநாட்டைச் சேர்ந்த ஊடுருவும் களைகளிடமிருந்து பல்லுயிர் பாதுகாப்பு முதலியவை குறித்த ஆய்வு, உழவியல் பேராசிரியர் ராம. கதிரேசன் தலைமையில் மேற்கொள்ளப்படும்.
மேலும், ஆசிரியர்கள் மாணவர்கள் பரிமாற்றம், இணைந்த ஆய்வுக் கட்டுரைகள், வேளாண் விரிவாக்கம், சர்வதேச கருத்தரங்கம் ஆகியனவும் ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ளன என்றார் அவர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT