கடலூர்

20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: என்எல்சி இயக்குநர்  வழங்கினார்

7th Sep 2019 08:44 AM

ADVERTISEMENT

நெய்வேலியில் என்எல்சி கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. 
நெய்வேலி லிக்னைட் அரங்கில் ஆசிரியர் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், தலைமை விருந்தினராகக் கலந்துகொண்ட என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன், அந்த நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட 20 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். அப்போது, அவர் பேசுகையில் தினமும் புதிய விஷயங்களை கற்கும் ஆவலும், மாணவர்களை அன்புடன் வழிநடத்தும் பண்பும் ஆசிரியர்களுக்கு அவசியம் என்றார். 
மேலும், ஆசிரியர்களுக்கு 5 ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்வில், கல்வித் துறை தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன், பொது மேலாளர் எஸ்.விநாயகமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செந்தாமரை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நல்லாசிரியர் விருது பெற்ற இசை ஆசிரியைகள் என்.ஜெயந்தி, கே.ஸ்ரீரஞ்சனி ஆகியோர் பாடல்கள் பாடினர். வட்டம்-11 என்எல்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் தாங்கள் பயிற்றுவித்த பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்த 142 என்எல்சி பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வட்டம்-26 என்எல்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் மந்தாரக்குப்பம் என்எல்சி மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. 
10-ஆம் வகுப்பில் மாநில பாடத் திட்டத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயின்ற தலா 2 மாணவிகள், மத்திய பாடத் திட்டத்தில் பயின்ற 2 மாணவிகளுக்கு என்எல்சி சார்பில் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல, பிளஸ் 2 வகுப்பில் தமிழ் வழியில் பயின்ற 2 மாணவிகள், ஆங்கில வழியில் பயின்ற 3 மாணவிகள், மத்திய பாடத் திட்டத்தில் பயின்ற 5 மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT