கடலூர்

ரயில் பாதை மூடப்பட்டதால் வியாபாரிகள், நோயாளிகள் அவதி

7th Sep 2019 08:42 AM

ADVERTISEMENT

கடலூரில் ரயில் பாதை அடைக்கப்பட்டுள்ளதால்  நோயாளிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலூர் பெருநகராட்சிக்கு உள்பட்ட  திருப்பாதிரிபுலியூரில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகள், நகைக்கடைகள் அதிகளவில் அமைந்துள்ளன. எனவே, இந்தப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. ஆனாலும், பல்வேறு நிர்பந்தங்களால் இந்தப் பாதை சரிவர அமைக்கப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது. 
எனவே, அருகே உள்ள ரயில் நிலையத்துக்குச் செல்லும் பாதையை திருப்பாதிரிபுலியூர் பான்பரி சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த சந்தையின் அருகே உள்ள கடலூர் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்வோரும் இந்தப் பாதையை பயன்படுத்தி வந்தனர். புதிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்ட பிறகும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாதை பயன்பாட்டில் இருந்தது.  இந்த நிலையில்,  ரயில்வே நிர்வாகம் திருப்பாதிரிபுலியூர் பகுதியில் இருந்த ரயில் டிக்கெட் வழங்கும் பகுதியை எதிரே உள்ள புதுநகர் பகுதிக்கு மாற்றியது. 
மேலும், பல்வேறு வளர்ச்சிப் பணிகளைக் காரணம் காட்டி, ரயில் நிலையத்துக்குள் நுழையும் பாதைக்குள் வாகனங்கள் நுழைய முடியாதபடி இரும்புத் தடுப்புகளைக் கொண்டு அடைத்தது. இதனால், பான்பரி சந்தை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட் காலனி ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாதபடி அந்தப் பகுதி தனித் தீவாக மாறியது. 
இந்த நடவடிக்கையானது பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, கடலூர் நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியதாவது: 18 படுக்கைகள் வசதி கொண்ட இந்த மருத்துவமனையில் ஒரு மாதத்தில் சராசரியாக 80 பிரசவங்கள் வரை நடைபெற்று வந்தது. 500 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து சென்றனர். ரயில்வே நிர்வாகம் பாதையை அடைத்த பிறகு, இந்த மருத்துவமனையில் ஒரு மாதத்தில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை 30-ஆக குறைந்தது. 
தற்போது மேலும் மோசமடைந்து 2 அல்லது 3 பிரசவங்கள் மட்டுமே நடைபெறுகிறது. மருத்துவமனைக்கு அவசர தேவைக்கு ஆட்டோவில் வர முடியாத நிலை உள்ளதால், கர்ப்பிணிகளை அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி விடுகிறோம். புறநோயாளிகள் பிரிவிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகை உள்ளது. மருத்துவமனைக்கு ஆட்டோக்கள் வந்துச் செல்லும் வகையிலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். நகர ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு  வந்து செல்லும் வகையில் மார்க்கெட் காலனி அருகே நடைபெறும் சாலைப் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
இதுகுறித்து தென்னக ரயில்வே பயணிகள் நலச் சங்கத் தலைவர் இராம.முத்துக்குமரனார் கூறியதாவது: ரயில்வே நிர்வாகம் பாதையை அடைத்துள்ளதால் வியாபாரிகள், மருத்துவமனைக்கு வந்துச் செல்வோர் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சர், திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்தினரை சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன் கூறியதாவது: இந்தப் பாதையை மீண்டும் திறக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து போராட்டமும் நடத்தியுள்ளோம். ரயில்வே துறையினரை தொடர்பு  கொண்டும் வலியுறுத்தியுள்ளோம். 
இந்தப் பாதையை மீண்டும் திறக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT