கடலூர்

மீன்பிடி துறைமுகத்தைப் புதுப்பிக்க கருத்துக் கேட்பு: பொதுமக்கள், மீனவ அமைப்பினர் வரவேற்பு

4th Sep 2019 09:56 AM

ADVERTISEMENT

கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தை ரூ.100 கோடியில் புதுப்பிப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள், மீனவ அமைப்பினர் இந்தத் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
 கடலூர் முதுநகரில் அமைந்துள்ள துறைமுகம் தற்போது மீன்பிடித் தொழிலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இந்த துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்றி, அதை புதுப்பிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த துறைமுகத்திலிருந்து தினமும் 245 இயந்திரப் படகுகளும், 1,555 சாதாரண படகுகளும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்கின்றன. ஆனால், 600 படகுகளை மட்டுமே மீன்பிடித் தளத்தில் நிறுத்த முடியும் என்பதால் மற்றவை அருகே உள்ள ஆற்றின் முகத்துவாரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. 
இங்கு, வலைகள், படகுகளை சீரமைக்கவும், பேரிடர் காலங்களில் பாதுகாப்பான இடத்தில் படகுகளை நிறுத்தவும் உரிய வசதிகள் இல்லை. இதனால், இடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய மீன்பிடி தளமாக இதனை மாற்ற வேண்டுமென மீனவர் அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆய்வு நடத்திட டி.எச்.ஐ. என்ற தனியார் நிறுவனத்தை அணுகியது. அந்த நிறுவனம் ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை தமிழக அரசுக்கு வழங்கியது.
 அதில், ரூ.100 கோடியில் இந்தத் துறைமுகத்தை விரிவுபடுத்தலாம் என்றும், அதில் கூடுதலாக 150 இயந்திரப் படகுகளை நிறுத்த முடியும் என்றும், இதற்காக கெடிலம் ஆற்றின் கரையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு படகு அணையும் சுவர் கட்டுதல், மீன்வலைகள் பழுது பார்த்தல் தளம், பழுதாகும் படகுகளை உடனுக்குடன் சரி செய்திட தனியாக தளம், மீன்களை இறக்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் தனி இடம், சுகாதாரமான முறையில் கையாளும் வகையில் கழிவுநீர் வாய்க்கால், கழிப்பறை வசதிகளை அமைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
 இதுதொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு மீனவப் பிரதிநிதிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பொதுமக்களுக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தையும் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், அதற்கான கூட்டம் நடத்தி அதன் விவரங்களை தெரிவிக்க மாநில சுற்றுச்சூழல் தாக்கீட்டு மதிப்புக்குழு உத்தரவிட்டது.
இதையடுத்து, கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மீன்வளத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜகிருபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ், மீன்வளத் துறை உதவி இயக்குநர் பி.ரம்யாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளத் துறை அலுவலர் திருஅருள், இந்தத் திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
 கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலானோர் இந்தத் திட்டத்தை வரவேற்றனர். மீனவர் விடுதலை வேங்கை நிர்வாகி திருமுகம், அனைத்து பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி எம்.சேகர், சோனங்குப்பம் கே.என்.தங்கமணி, மீனவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பெரு.ஏகாம்பரம், தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் கெஜேந்திரன் உள்ளிட்டோர் இந்தத் திட்டத்தை வரவேற்றனர். இருப்பினும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் இதை இணைப்பதோ, தனியாருக்கு துறைமுகத்தை தாரை வார்ப்பதையோ ஏற்க முடியாது என்றனர். 
 மேலும், துறைமுகம் விரிவாக்கத்துக்காக மீனவ கிராம மக்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடக் கூடாது, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது, மீனவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும், கட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் மீனவர்கள் சென்று வரும் வகையில் இந்தத் திட்டம் அமைய வேண்டும், இந்தத் திட்டத்துக்கான ரூ.100 கோடி நிதி போதுமானதல்ல என்பதால் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 
மத்திய அரசு உதவி: இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசின் மீன்பிடிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கும் நிதியின் கீழ் பெறுவதற்கு மாநில அரசு பரிந்துரை வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதல் விரைவில் அளிக்கப்பட்டு நிதி பெறப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து பணிகள் தொடங்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT