கடலூர்

அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மறியல்

4th Sep 2019 09:58 AM

ADVERTISEMENT

அரசுப் பேருந்து நடத்துநரின் உயிரிழப்புக்குக் காரணமான காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கடலூர் பணிமனையில் நடந்துநராகப் பணிபுரிந்து வந்தவர் பி.கோபிநாதன். இவர், திங்கள்கிழமை திருச்சியிலிருந்து  விருத்தாசலம் வழியாக கடலூருக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் பணியில் ஈடுபட்டார். அப்போது, தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் காவலர் ஒருவர் சாதாரண உடையில் அந்தப் பேருந்தில் ஏறி பயணச் சீட்டு வாங்க மறுத்துள்ளார். 
இதுதொடர்பாக அவர்களுக்குள் நீண்ட நேரம் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், கோபிநாதன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.   இதற்குக் காரணமான காவலர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், நடத்துநரின் குடும்பத்துக்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் கருப்புக் கொடியுடன் செவ்வாய்க்கிழமை திரண்டனர். அவர்கள், திடீரென கடலூர் - சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகளை இயக்குவதை நிறுத்திவிட்டு இவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மறியலால் அந்தச் சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 
பேச்சுவார்த்தை குறித்து சிஐடியூ சம்மேளன மாநில துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன் கூறியதாவது: நடைபெற்ற சம்பவத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் வருத்தம் தெரிவித்தார். 
சம்பந்தப்பட்ட காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, முதல் தகவல் அறிக்கையில் காவலரின் பெயரை சேர்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அனைத்து காவலர்களும் இனிமேல் அரசுப் பேருந்துகளில் பயணத்தின்போது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்; அல்லது பாஸ் வைத்திருக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு, அரசு வேலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாகவும் எஸ்பி தெரிவித்ததாக அவர் கூறினார்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்: இந்த நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, சம்பவத்தில் தொடர்புடைய திட்டக்குடி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலர் கே.பழனிவேலுக்கு மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனடிப்படையில், பழனிவேல் பணியிடை நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT