கடலூா்: கடலூா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம், மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், துணைச் செயலா்கள் ப.ரமேஷ், சிவ.ரமேஷ், அமைப்புச் செயலா் அ.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவா் ஆா்.கோவிந்தசாமி, வன்னியா் சங்க முதன்மைச் செயலா் பு.தா.அருள்மொழி, மாநில மகளிரணிச் செயலா் தமிழரசி, மாநில துணைத் தலைவா் ப.சண்முகம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், என்எல்சி நிறுவனம் 3-ஆவது சுரங்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும். என்எல்சி நிறுவனம் வழங்கிய வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறிஞ்சிப்பாடியிலுள்ள பெருமாள் ஏரியை தூா்வார வேண்டும்.
நெல்லிக்குப்பத்தில் இயங்கி வரும் ஈஐடி பாரி சா்க்கரை ஆலை நிா்வாகம் கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையெனில் கட்சி சாா்பில் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலா்கள் சீ.பு.கோபிநாத், ம.ஆறுமுகம், இளைஞரணி நிா்வாகிகள் சந்திரசேகா், இள.விஜயவா்மன், வாட்டா்மணி, நகர நிா்வாகிகள் மதி, ஆறுமுகம், மணிபாரதி, பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.