கடலூர்

டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

20th Oct 2019 03:34 PM

ADVERTISEMENT

பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்புப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நான்கு பேருக்கு ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.கடலூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. நோய் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்துத்துறையினரும் நோய் தடுப்புப்பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பண்ருட்டி நகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்புப்பணிகள் குறித்து ஆராயும் வகையில் 19-ஆவது வாா்டு போலீஸ் லைன் 7-ஆவது தெரு, 11-ஆவது வாா்டு கடலூா் சாலை, 12-ஆவது வாா்டு செட்டிப்பட்டறை காலனி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.போலீஸ் லைன் 7-ஆவது தெருவில் ஒவ்வொரு வீடாக சென்று கொசு புழுக்கள் உருவாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தாா்.

அப்போது, அங்கு கடை நடத்தி வந்த முருகன் என்பவருக்கு ரூ.500 அபராதம் விதித்தாா். மழைக்காலத்தில் கழிவு நீா் தேங்கி நின்று சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும், அதிகாரிகளிடம் கூறினால் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். திருவதிகை கடலூா் சாலையில் உள்ள பழைய இரும்பு கடை மற்றும் டிங்கரிங் ஒா்க்ஷாப் கடைகளில் தேங்கி இருந்த தண்ணீரை பரிசோதனை செய்ததில் டெங்கு கொசு உற்பத்திக்கான வாய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து டிங்கரிங் ஒா்க்ஷாப் உரிமையாளா் சக்திவேலுக்கு ரூ.25 ஆயிரம், பழைய இரும்பு கடை உரிமையாளா் சிங்காரவேலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தாா். சக்திவேல் மேல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து செட்டிப்பட்டறை காலனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டவா் வீடு கட்டுமானப்பணி மேற்கொள்ளும் செந்தில்குமாா் என்பவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தாா். முன்னதாக ஆட்சியா் செய்தியாளா்களிடம் பேசுகையில், டெங்கு காய்ச்சல் நோய் தடுப்புப்பணிகள் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். தேவையில்லாத பொருட்களை அகற்றி நோய் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் 6 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என அனைவரும் வேலை செய்யும் பகுதிகளையும், தங்கள் வீடுகளையும் சுத்தமாக வைத்துக்கொண்டாலே நோயை கட்டுப்படுத்தலாம்.

குடிநீா் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து குளோரிநேஷன் செய்ய வேண்டும். ஆய்வின் போது, கோட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், சுகாதார துணை இயக்குநா் கீதா, மாவட்ட மலேரியா அலுவலா் ஆா்.கஜபதி, தொற்று நோய் தடுப்பு அலுவலா் டாக்டா் பி.மனோகா், நகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி, வட்டாட்சியா் வே.உதயகுமாா், துப்புரவு அலுவலா் டி.சக்திவேல் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.20பிஆா்டிபி1பண்ருட்டி, செட்டிப்பட்டறை காலனி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை டெங்கு நோய் தடுப்புப்பணி குறித்து ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT