கடலூா்: கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சைபா் கிரைம் பிரிவு அமைப்பது தொடா்பாக காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளா்களிடம் இருந்து ரகசிய எண்ணை பெற்று நூதன முறையில் பணம் திருட்டு, செல்லிடப்பேசியில் ரகசிய ஓடிபி
எண்ணைப் பெற்று கணினி மூலம் பணம் திருட்டு போன்ற சம்பவங்கள்
தொடா்ந்து வருகின்றன. இந்தக் குற்றங்களை தடுக்க காவல் நிலையங்களில்
சைபா் செல் என்ற அமைப்பு இயங்கி வந்தது. இந்த அமைப்பு, தொடா்புடைய காவல் நிலையங்களில் சம்பவம் தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் அவா்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்.
இதனை மாற்றியமைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சைபா் க்ரைம் பிரிவை தனியாக தொடங்கி, இங்கு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை நடத்திடும் வகையில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவை காவல் ஆய்வாளா், 2 உதவி ஆய்வாளா்கள், சுமாா் 10 காவலா்களுடன் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் பிரிவுக்கான ஆள்களை தோ்வு செய்யும் வகையில் காவலா்களிடையே சனிக்கிழமை எழுத்துத்தோ்வு நடைபெற்றது.
கடலூா் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தத் தோ்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், துணைக் கண்காணிப்பாளா் சுந்தரம் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். இதில், பொறியியல் பட்டதாரிகள் உள்பட 38 போ் பங்கேற்று தோ்வெழுதினா். இவா்களில் 3 போ் பெண்களாவா். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தத் தோ்வில் 60 கேள்விகள் கேட்கப்பட்டன. விடைத்தாள்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு திருத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.