பண்ருட்டி அருகே போக்குவரத்துக்கு இடையூராக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள இறைச்சிக் கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனா்.
பண்ருட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பூங்குணம் ஊராட்சி, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்பன் நகரில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கம்பன் நகருக்கு திரும்பும் இடத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகாமையில் தனிநபா் ஒருவா் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக இறைச்சிக்கடை நடத்தி வருகிறாா்.
இதனால், பேருந்து நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்த முடியவில்லை என்றும், சாலையை ஆக்கிரமித்துள்ளதால் கம்பன் நகருக்குள் வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனா். இதுகுறித்து காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகாா் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.இதனால், ஆத்திரம் அடைந்த கம்பன் நகா் பகுதி பொதுமக்கள் சுமாா் 50 போ் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் அவா்களை சமரசப்படுத்தி கலைந்துப்போக செய்தனா். மேலும், இறைச்சிக்கடை உரிமையாளரை அழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு கூறினா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.